கன்னி நிலவுக்குக்
காற்றுக் கதாநாயகன்
கார்மேகத் தூதுவனின்
கைகொடுத் தனுப்புகிறான்
ஒரு காதல் கடிதம் !
கன்னிக்கோ கடிதங்கள் பழக்கமில்லை!
களங்கத்தைக் கண்ணுக்குக் காட்டினாலும்
அவள் கன்னிதான் - அவளுக்குக்
கடிதங்கள் பழக்கமில்லை !
கார்மேகத் தானும்அந்தக்
கதைசுமந்து போகின்றான்! அவன்
அனுதினமும் காண்கின்ற
கனவுமாளிகையின் கண்ணாடி உருவத்தைக்
கண்ணாரக் கண்டு கடிதத்தைச் சேர்ப்பதற்குக்
கண்ணிறைந்த நீரோடு கடந்தே செல்கின்றான்!
மலைப் பெண்ணொருத்தி வழியினிலே
மயக்கும் விழிகொண்டு விளிக்கின்றாள்!
சிரிக்கும் நிலவிடமே சிந்தை பறிகொடுத்த
தூதுவனோ
மலைப்பெண்ணுக்கு மறுப்போலை தந்துவிட்டு
மனம்மறுகிச் செல்கின்றான் மற்றோர் வழிநோக்கி !
கன்னல் கடிதத்தைக் கண்டநிலாக் கன்னியவள்
கார்மேகத் தானையே காதலிக்கத் தலைப்பட்டாள் !!
ஏனென்றால்-
அது 'கையொப்பமில்லாத காதல் கடிதம்' !
******************
K.Balaji
03.11.1981
"சாவி” பத்திரிகைக்கு, ‘தலைப்புக்கேற்ற
கவிதை’ போட்டிக்காக அனுப்பியது !

No comments:
Post a Comment