Tuesday, September 30, 2014

எங்கள் தந்தை!

(This is translated by me from a Malayalam poem which I came across . The original in Malayalam is given at the bottom)


எங்கள் தந்தை!

மாற்றுச் சொல்லிட்டு  நிரப்ப முடியாத
பத்தரை மாற்றுத்
 தங்கமாம்  தந்தை !
எங்கள் தந்தை !

அடிமரத்து வேராக அணைத்து நின்று
அனைவரையும் காத்து நிற்கும்
 அரசன் !

நன்மையே உருவான அன்னையின்
கைப்பிடித்துக் கனவுகளை நனவாக்கிக்
குலவிளக்காய் அவள்திகழக்
கூடவே  துணைநின்ற
குணவான்!

தோல்விகளைக் கண்டுமனம்
துவளும் போதெல்லாம்
தோள்கொடுத்துத்  தனயனைத்
தூக்கி நிறுத்துகின்ற
நண்பன் !

சுமையெல்லாம் தாங்கிநின்ற
காலம் மாறச்
சுகம்கூடச் சுமையாகத்
தெரிகிறது !
தாங்கி நின்ற காலமெலாம் தான்மாறத்
தனைத் தாங்கத் தோளொன்று  தேவைப்
 படுகிறது !

முதுமையின் நிழற்கோடு
முன்வந்து நின்றாலும்,
நரையும் திரையும்
மூப்பும் நிறைந்தாலும்,
முகத்தினிலே அந்தச்
சிங்காரச் சிரிப்பென்றும்
 மாறாது !
சீறான அன்பென்றும் குறையாது !

நேசத்தின் நிறைவிடமாம்,
பாசத்தின் உறைவிடமாம்,
பலர்போற்றும் பண்பின்
பெருங்கடலாம்
எங்கள் தந்தை !

பொருள்கூறிப் புரியவைக்க
முடியாத
புண்ணியத்தின்
பெரும்பொருளாம்

எங்கள் தந்தை !

(K.Balaji Sept 30 2014)

The Original in Malayalam is given below:
written by


മാറ്റ് പറയാൻ വാക്കുകൾ തികയാത്ത പത്തരമാറ്റ്
തങ്കമാണ് അച്ഛൻ
കുടുംബ വൃക്ഷത്തിൻ തായ് വേരും ഉണർവ്വുമാണ്
ജീവിതക്കടലിന്നാഴം തിരഞ്ഞതിൻ
കാണാച്ചുഴികളെ കാണിക്കുന്നവൻ
നന്മയാമമ്മയെ കൈപിടിച്ചുയർത്തി
നിലവിളക്കാക്കി അച്ഛൻ
അഗ്നിപരീക്ഷകൾ തരണം ചെയ്യാൻ കൈത്താങ്ങു
തരുന്നതുമച്ഛൻ
നല്ല നാളുകളിൽ താങ്ങായിരുന്നവൻ
വാർദ്ധക്യ തീക്ഷ്ണതയിൽ താങ്ങുതേടുന്നു
അവിടെ മാത്രമാണ് ദൈന്യത അച്ഛന്റെ കണ്ണുകളിൽ
തെളിയുക
സ്നേഹം കരുത്തായ് തെളിയും അപ്പോളുമാ ചുക്കിച്ചുളിഞ്ഞ
മുഖത്തൊരു ചിരിയായ്
ജരയും നരയും ചുളിവുകൾ വീഴ്ത്താത്ത നിറം മാറ്റാത്ത
മനസ്സ് തെളിഞ്ഞ ചിരിയായി അച്ഛൻ

Saturday, September 27, 2014

கையொப்பமில்லாத காதல் கடிதம்


கன்னி நிலவுக்குக் 
காற்றுக் கதாநாயகன்
கார்மேகத் தூதுவனின்
 கைகொடுத் தனுப்புகிறான்
ஒரு காதல் கடிதம் !

கன்னிக்கோ கடிதங்கள் பழக்கமில்லை!
களங்கத்தைக் கண்ணுக்குக் காட்டினாலும்
அவள் கன்னிதான் - அவளுக்குக்
கடிதங்கள் பழக்கமில்லை !

கார்மேகத் தானும்அந்தக்
கதைசுமந்து போகின்றான்! அவன்
அனுதினமும் காண்கின்ற
கனவுமாளிகையின் கண்ணாடி உருவத்தைக்
கண்ணாரக் கண்டு கடிதத்தைச் சேர்ப்பதற்குக்
கண்ணிறைந்த நீரோடு கடந்தே செல்கின்றான்!

மலைப் பெண்ணொருத்தி வழியினிலே
மயக்கும் விழிகொண்டு விளிக்கின்றாள்!
சிரிக்கும் நிலவிடமே சிந்தை பறிகொடுத்த
தூதுவனோ
மலைப்பெண்ணுக்கு மறுப்போலை தந்துவிட்டு
மனம்மறுகிச் செல்கின்றான் மற்றோர் வழிநோக்கி !

கன்னல் கடிதத்தைக் கண்டநிலாக் கன்னியவள்
கார்மேகத் தானையே காதலிக்கத் தலைப்பட்டாள் !!

ஏனென்றால்-
அது 'கையொப்பமில்லாத காதல் கடிதம்' !

******************

K.Balaji
03.11.1981
"சாவி” பத்திரிகைக்கு, ‘தலைப்புக்கேற்ற
 கவிதை’ போட்டிக்காக அனுப்பியது !




Friday, September 26, 2014

நினைவுகள்

நண்பர் திரு. ரவி அவர்கள் எழுதிய  The Fleeting Time என்ற ஆங்கிலக் கவிதையின் பாதிப்பு , எனது இந்த வரிகள் !


தண்மையதன் அணைப்பினிலே’
தனித்திருந்த காலையிலே 
தண்ணிலவை வானமதும்
தவிர்த்திருந்த நாளினிலே 
தாரகைகள் வெண்பனியாய்
ஒளிர்ந்திருந்த வேளையிலே
தவமிருந்தேன் தனைமறந்தே
தலைவியுனை நினைத்திருந்தேன் !

நெஞ்சமெனும் கடற்கரையின்
நேரியதோர் பாதையிலே 
நேற்றைப் பொழுதுகளின்
நினைவுக் காற்றடிக்கும்!
உவகைதந்த உன்முகத்தின்
தோற்றங்கள் தேடிவரும்!
நினைவுகளே தொடர்ந்துவரும்
நிம்மதியோ விடைகள் பெறும் !

காலத்தின் ஓட்டமதில்
கரைந்திடாத உன்காதல் !
களங்கமற்ற கண்பேசும்
காவியமாம் உன்காதல்!
ஏழிசையாய் எனில் நுழைந்த
தேவதையாமுன் காதல்!
என்றென்றும் என்மனதில்
நிலைத்திருக்கும் நினைவாக !

வேதனையின் வேளையிலே 
வேறேதும் நினைவின்றி
வேரறுந்த கொடிபோலே 
வீழ்ந்தே நொந்திருந்தேன்!
நொந்திருந்த காலமெலாம்
நொடியினிலே தான்மறைய
வந்ததுபார் விடிவெள்ளி
வாடையிலோர் வேனலிழை !

வாடையிலோர் வேனலிழை !
வாழ்வினிலே கானமழை !
**********

The Original in Engilsh follows: 

The Fleeting Time!




Thursday, September 18, 2014

இதயத்தின் இசை !

இதயத் திருத்தலத்தில் என்றும்உறைந்திருக்கும் இணையற்ற இசைத் தெய்வமே ! உன் அருள் வெள்ளம் என்றென்றும் என்னுள்ளில் ஓயாமல் ஓடியே பெருகிடட்டும் ! வாய்கொண்டு பாடுமந்த வரம் இல்லையென் றாலும் வார்த்தைகள் வந்தி டட்டும்! - மனம் வகையாக வாழ்ந்தி டட்டும் ! தேனூறும் பாடல்கள் தெய்வத்தின் அருளாகத் தோன்றியே வாழ்த்திடட்டும்! - மனம் தினந்தோறும் வணங்கிடட்டும் ! ஓமென்று உனையெண்ண ஒரு நூறு பாடல்கள் உடனோடி வந்தி டட்டும் - உளம் பாகாய் உருகிடட்டும் ! தானென்ற எண்ணங்கள் எனைவிட்டுத் தனியே தன் வழிநோக்கி யேகிடட்டும் - தக்க வார்த்தைகள் அதை விரட்டும் ! ஏனென்ற கேள்விக்கு இலக்காகா வண்ணத்தில் எழுத்துக்கள் சூழ்ந்தி டட்டும்! - இசை என்னோடு வாழ்ந்தி டட்டும் ! என்னாளும் 'இசை' என்ற சுருதிஎன்றும் மாறாமல் என்னோடு சேர்ந்தி டட்டும்! - இதை எல்லோரும் தேர்ந்தி டட்டும் ! --பாலாஜி 02.08.1981